கொரோனா வைரசின் தாக்கம் உலகின் பல நாடுகளையும் அழித்து வருகிறது.கொரோனாவை கட்டுப்படுத்த மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்கின்றன. டில்லியில் சமீபத்தில் நடந்த மாநாட்டில் பல மாநிலங்களில் இருந்தும் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர். இதில் பலருக்கு கொரோனா தொற்று பரவியுள்ளது. தெலுங்கானாவில் பலர் இறந்ததாக தகவல்கள் வெளியானது. தொடர்ந்து, கோவாவிலும் கொரோனா தொற்று இருப்பதாக சந்தேகத்தின் அடிப்படையில் பலர் தனிமைப்படுத்தப்பட்டனர். அதில் 563 பேரின் ரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டு பரிசோதனைக்காக அனுப்பப்பட்டது.
இது தொடர்பாக கோவா மாநில சுகாதாரத்துறை அமைச்சர் விஸ்வஜித் ரானே இன்று (ஏப்.,6) கூறுகையில், கொரோனாவை கட்டுக்குள் வைக்க கோவா அரசு மத்திய அரசுடன் இணைந்து போராடி வருகிறது. நோய் தொற்றை பரிசோதிப்பதற்கு தேவையான மருத்துவ கருவிகள் மற்றும் உபகரணங்கள் தயார் நிலையில் உள்ளன. நோயைச் சோதிக்க 2000 துரிதக் கருவிகளும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. கொரோனைவை எதிர்த்து போராட நாங்கள் ஒன்றுபட்டுள்ளோம். சுமார் 2000 பேர் வரை வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு வருகின்றனர்.
மாநிலத்தில் உள்ள மோல்பயோடெக்ஸுடன் என்ற நிறுவனத்துடன் இணைந்து சுகாதாரத்துறை 5 மருத்துவ இயந்திரங்கள் மற்றும் 2,000 'ட்ரூனாட்' விரைவு சோதனைக் கருவிகளை வாங்கப்பட்டது. இது பி.சி.ஆர் அடிப்படையிலான தொற்று கண்டறியும் கருவியாகும். மாஸ்க்குகள் தயாரிப்பு பணி துவங்கப்பட்டுள்ளது. இவ்வாறு கூறினார்.