பணம் ஒரு பிரச்னையில்லை: காம்பீருக்கு கெஜ்ரி பதில்

புதுடில்லி: டில்லி அரசுக்கு கொரோனா நிவாரணமாக ஒரு கோடி ரூபாய் கொடுத்த பாஜ., எம்பி., கவுதம் காம்பீருக்கு, முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் பதிலளிக்கையில், பணம் ஒரு பிரச்னையில்லை, பரிசோதனை கிட்கள் தான் பிரச்னை என குறிப்பிட்டுள்ளார்.

கொரோனா நிவாரணப் பணிகளுக்காக நிதி வழங்கும்படி பிரதமர் மோடி, நாட்டு மக்களுக்கு வேண்டுகோள் விடுத்திருந்தார். அதேபோல், மாநிலங்களும் முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு நன்கொடை வழங்கும்படி கேட்டுகொண்டுள்ளது. இதனையடுத்து பல்வேறு பிரபலங்கள், அரசியல் தலைவர்கள், பொதுமக்கள் என அனைத்து தரப்பினரும் தங்களால் முடிந்த நன்கொடைகளை வழங்கி வருகின்றனர். அந்தவகையில், இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரரும், பாஜ., எம்பி.,யுமான கவுதம் காம்பீர், தனது தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து டில்லி அரசுக்கு ரூ.50 லட்சம் வழங்குவதாக 2 வாரங்களுக்கு முன்பு அறிவித்திருந்தார். தற்போது கூடுதலாக ரூ.50 லட்சம் ஒதுக்கியிருப்பதாக கூறி, முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு கடிதம் அனுப்பி உள்ளார்.


அந்த கடிதத்தை டுவிட்டரில் பகிர்ந்துள்ள காம்பீர், மேலும் பதிவிட்டுள்ளதாவது: முன்னதாக என் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து 50 லட்சம் ரூபாயை வழங்குவதாக அறிவித்தும், உங்களின் (கெஜ்ரி., அரசு) ஈகோ அனுமதிக்கவில்லை. இருப்பினும், அப்பாவிகள் பாதிக்கப்படாத வகையில் மேலும் ரூ.50 லட்சத்தை தருகிறேன். இந்த ஒரு கோடி ரூபாய் குறைந்தபட்சம் மாஸ்க்குகள், மருத்துவ உபகரணங்களின் அவசர தேவைகளை தீர்க்கும். இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.